"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

நபிமார்கள் மண்ணறைகளில் உயிருடன் இருக்கின்றனரா?

வாதம் 2: நபிமார்கள் மண்ணறைகளில் உயிருடன் இருக்கின்றனர். எனவே அவர்களிடமும், அவ்லியாக்களிடமும் தேவைகளை வேண்டிப் பிரார்த்திக்கலாம். மிஃராஜின் போது நபி மூஸா (அலை) அவர்கள் தொழுகையை குறைத்து வரும்படி முஹம்மத் நபி (ஸல்) அவர்களிடம் கூறியதால், அதை அவர்கள் குறைத்துக் கொண்டு வந்தது மரணித்தவர்களிடம் உதவி தேடலாம் என்பதைக் காட்டவில்லையா?

மறுப்பு : மனிதர்கள் அனைவருக்கும் மரணம் பொதுவான விதியாகும். அதிலிருந்து நபிமார்கள், அவ்லியாக்கள் விலக்கப்பட்டவர்கள் அல்லர். அதையும் மீறி ஒருவன் கருத்துக் கூற முற்பட்டால் அவனை இஸ்லாமிய வரையறைக்குட்பட்டவனாக கருதவே முடியாது.

மிஃராஜ் என்பது அல்லாஹ்வின் தூதருக்கு அல்லாஹ் ஏற்படுத்திய விஷேஷ நிகழ்வாகும். அதில் அவனது பல அத்தாட்சிகளை அவருக்கு காண்பித்தான். வேறு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவர்களுக்கு இவ்வாறானதொரு நிகழ்வு நடைபெறவில்லை. நபி மூஸா (அலை) அவர்களுக்கும், நபி முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் இடையில் நடந்த உரையாடலும் அதில் ஒன்றாகும்.

தொழுகையைக் குறைத்து கேட்கும்படி மூஸா (அலை) அவர்கள் கூறியதை நபி (ஸல்) அவர்கள் கூறியதால்தான் நம்புகின்றோம். அதே போல் அவ்லியாக்களின் உடல்களை மண் திண்ணாது என்றும், அவர்கள் மண்ணறையில் இருந்தவாறு உலகில் நடப்பதை அறிவார்கள் என்றும் நபி (ஸல்) அவர்கள் எங்கேனும் கூறியுள்ளார்களா?

அடுத்ததாக, கப்ரில் இருந்தவாறு நபி (ஸல்) அவர்கள் சிபாரிசு செய்யமாட்டார்கள். மறுமையிலேயே சிபாரிசு செய்வார்கள் என்பதை புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட பல ஹதீஸ் கிரந்தங்களில் காண முடிகின்றது. இமாம் புகாரியின் கிரந்தத்தத்தில் சிபாரிசு பற்றி செய்தி பல இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் இவ்வாறு இடம் பெற்றுள்ளது.

அவர்கள் (நபிமார்கள்), “முஹம்மதிடம் செல்லுங்கள்” எனக் கூறுவார்கள். உடனே அம்மக்கள் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் வந்து முஹம்மதே! நீர் அல்லாஹ்வின் தூதர், நபிமார்களில் இறுதியானவர், முந்திய, பிந்திய பாவங்களை அல்லாஹ் உமக்காக மன்னித்து விட்டான். உமது இரட்சகனிடம் எமக்காக சிபாரிசு வேண்டுவீராக! எமது நிலையினை நீர் கவனிக்க வேண்டாமா? எனக் கூறுவர். இதைக் கூறும் அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள்

فَأَنْطَلِقُ فَآتِي تَحْتَ الْعَرْشِ فَأَقَعُ سَاجِدًا لِرَبِّي عَزَّ وَجَلَّ ثُمَّ يَفْتَحُ اللَّهُ عَلَيَّ مِنْ مَحَامِدِهِ وَحُسْنِ الثَّنَاءِ عَلَيْهِ شَيْئًا لَمْ يَفْتَحْهُ عَلَى أَحَدٍ قَبْلِي ثُمَّ يُقَالُ يَا مُحَمَّدُ ارْفَعْ رَأْسَكَ سَلْ تُعْطَهْ وَاشْفَعْ تُشَفَّعْ

أخرجه البخاري من أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ

உடன் அர்ஷின் கீழ் வந்து, மகத்துவமிக்க எனது இரட்சகனுக்கு நான் சுஜுதில் விழுந்து விடுவேன். பின்பு அல்லாஹ் அவனது புகழாரங்களில் இருந்தும், அவனுக்குரிய அழகிய துதியையும் எனக்கு திறந்து தருவான் (மற்றொரு அறிவிப்பின்படி உதிப்பாக்குவான்). எனக்கு முன்னர் அவன் அதை யாருக்கும் திறந்து கொடுத்ததில்லை. பின்னர் முஹம்மதே! உமது தலையை உயர்த்தி, கேளும் கொடுக்கப்படும், பரிந்துரை செய்யும். உமது பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படும்’, எனக் கூறப்படும். (புகாரி, முஸ்லிம், அஹ்மத்) போன்ற பல ஹதீஸ் கிரந்தங்களில் காணப்படும் செய்திகளைப்பார்த்தால் சிபாரிசு என்பது மறுமை நாளில் எல்லாமனிதர்களின் கண் எதிரே நடக்கும் நிகழ்வுதான் என்பதையும், கப்ரு வாழ்க்கைக்கும், ஷஃபாஅத்திற்கும் இடையில் கடுகு அளவுகூட சம்மந்தம் இல்லை என்பதையும் அறியலாம்.

ஒவ்வொரு நபிக்கும் பதிலளிக்கப்படும் ஓர் அழைப்பிருந்தது. அதைக் கொண்டு அவரகள், அவசரமாக (உலக வாழ்க்கையிலேயே அதனை) அழைத்துவிட்டனர். எனது பிரார்த்தனையை எனது சமுதாயத்தின் மறுமை (ஷபாஅத்திற்காக) மன்றாட்டத்திற்காக நான் ஒதுக்கி வைத்துள்ளேன் (புகாரி), என நபி (ஸல்) அவர்கள் கூறியதை சரியாக சிந்திப்போர் மண்ணறைகளில் மன்றாட்டம் நடத்துவார்களா?

அல்லாஹ்வின் தூதர் தனது இறுதி நேர உரைகளில், “நான் உங்களை ‘ஹவ்ழுல் கௌஸர்’ நீர் தடாகத்தில் (ஏற்பாட்டாளன் போன்று) எதிர்பார்த்தவனாக இருப்பேன். (புகாரி, முஸ்லிம்) உங்களுக்குள் சர்ச்சைகள் தலைதூக்கும் போதெல்லாம் அந்த ‘ஹவ்ழ்’ நீர் தடாகத்தில் என்னை நீங்கள் சந்திக்கின்றவரை பொறுமையாக இருங்கள். (புகாரி, முஸ்லிம்) என தனது தோழர்களிடம் கூறியது மண்ணறையில் இருந்து கொண்டு உலகில் நடப்பதை தன்னால் அவதானிக்க முடியாது என்பதற்காக அன்றி வேறு எதற்காகக் கூறினார்கள் ?

அது மாத்திரமின்றி, அல்லாஹ்வின் தூதர் அவர்கள் உலகில் உயிர்வாழ்கின்ற போதே மறைவான செய்திகளை அறிய முடியாதிருந்திருக்கிறார்கள் என்பதற்கு நூற்றுக்கணக்கான சான்றுகள் உள்ளன.

நபி (ஸல்) அவர்கள் தபூக் பயணத்தில் இருந்து திரும்பியதும் வராமல் இருந்தவர்களை விசாரணை நடத்திய போது அவர்கள் நடந்து கொண்ட முறையையும் ஆதாரங்களில் ஒன்றாகக் கொள்ளலாம்.

அப்போருக்குச் செல்லாது தங்கிவிட்ட முனாஃபிக்குகள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து பல சாக்குப் போக்குகளைக் கூறி, சத்தியமும் செய்தனர். அவர்கள் எண்பதுக்கும் மேற்பட்டோராக இருந்தனர் எனக் கூறப்படுகின்றது.

فَقَبِلَ مِنْهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَانِيَتَهُمْ وَبَايَعَهُمْ وَاسْتَغْفَرَ لَهُمْ وَوَكَلَ سَرَائِرَهُمْ إِلَى اللَّهِ
அவர்களின் வெளிப்படையான காரணத்தை ஏற்றுக் கொண்ட அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அவர்களுடன் உறுதி மொழியும் செய்து கொண்டு, அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும் வேண்டினார்கள். (அதே நேரம்) அவர்களின் அந்தரங்க விஷயங்களை அல்லாஹ்விடம் ஒப்படைத்தார்கள். (புகாரி)

இந்த நிகழ்வு கப்ரில் நடப்பதை அல்ல, உலகில் ஒரு மனிதனுடன் தொடர்புடைய மறைவானவற்றையே நபி (ஸல்) அவர்கள் அறிய முடியாதவர்கள் இருந்திருக்கின்றார்கள் என்பதைக் காட்டவில்லையா?

இதைப் புரியாத பலர் பெரியார்கள் சுயநினைவிழந்த நிலையில், மரணிப்பவர்கள், மண்ணறையில் வைக்கப்பட்டதும் விழித்துக்கொள்வார்கள், உலகில் நடப்பதை அறிவார்கள் என்றெல்லாம் உளருவதைப் பார்க்கின்றோம். இதுவும் இஸ்லாத்தில் இல்லாத புதிய சித்தாந்தமாகும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்