"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

சப்தம் போடாதே!

நபிகள் நாயகம் முன்னிலையில் குரலை உயர்த்திப் பேசக் கூடாது என்பதையும் அவர்கள் மண்ணறையில் உயிருடன் வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள்.

இப்போது நபி அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இடத்திற்கு முன்பு நின்று கொண்டு குரலை உயர்த்திப் பேசக் கூடாது என்கிறார்கள். ஏனெனில் நபி உயிருடன் உள்ளார்களாம்.

இவர்களுக்கு எந்த அளவு மூளை வறண்டு போய் விட்டது என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

குரலை உயர்த்தக் கூடாது எனும் விதியை, நபிகள் நாயகத்தை மதிக்கும் வகையில் அவர்கள் வாழும் காலத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒழுங் காகவே இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான்.

ம்பிக்கை கொண்டோரே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரிடம் சப்தமிடுவது போல் அவரிடம் சப்தமிட்டுக் கூறாதீர்கள்! நீங்கள் அறியாத நிலையில் உங்கள் செயல்கள் (இதனால்) அழிந்து விடும்.அல்குர்ஆன் 49 2

இந்த வசனத்தை நன்கு கூர்ந்து படியுங்கள். இது நபிகள் நாயகம் நம்மிடையே வாழும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக் கத்தையே கற்றுத் தருகிறது.
நபியின் குரலை விட உங்கள் குரலை உயர்த்தாதீர்கள் என்று கூற வேண்டும் என்றால் நபி நம்மிடையே வாழ்ந்து, அவர்களது குரலை நாம் செவிமடுக்கும் வகையில் நம்மிடம் பேச வேண்டும். அப்போது தான் அவர்களது குரலை விட சப்தத்தை உயர்த்தாதீர்கள் என்று சொல்ல முடியும்.
இதற்கு அடுத்து வரக்கூடிய வசனங்கள் யாவும் இக்கருத்தை உறுதிப்படுத்துகின்றது.

அல்லாஹ்வின் தூதரிடம் தமது குரல்களைத் தாழ்த்திக் கொள் வோரின் உள்ளங்களை (இறை) அச்சத்துக்காக அல்லாஹ் பரிசுத்தப் படுத்தி விட்டான். அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான கூலியும் இருக்கிறது.
அல்குர்ஆன் 49:3
(முஹம்மதே!) அறைகளுக்கு வெளியே இருந்து உம்மை அழைப்பவர்களில் அதிகமானோர் விளங்காதவர்கள்.
அல்குர்ஆன் 49:4

இதன் தொடர்ச்சியில் 7ம் வசனத்தில் \உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்\ என்று அல்லாஹ் கூறுகின்றான்.
அப்படி என்றால் அல்லாஹ்வின் தூதர் நம்மிடையே இருந்து, அவர்களது குரலை நாம் செவிமடுக்கும் வகையில் இருக்கும் போது நாம் எப்படி நடக்க வேண்டும் என்பதைத் தான் இது பேசுகிறது.
நபியின் குரலுக்கு மேல் உங்கள் சப்தத்தை உயர்த்தாதீர்கள் எனும் இறைவார்த்தை இக்கருத்தை தெளிவாகப் பறைசாற்றுகின்றது.
இன்றைக்கு நபிகள் நாயகம் நம்முடன் இல்லை. அவர்களது குரலை நம்மால் செவிமடுக்க இயலாது. எனவே இச்சட்டம் இப்போது பொருந்தாது.
நபியின் குரலுக்கு மேல் உங்கள் சப்தத்தை உயர்த்தாதீர்கள் என்றால் இது எப்படி நபிகள் நாயகம் உயிருடன் உள்ளார்கள் என்பதற்கு ஆதாரமாகும்?
இவர்களுக்கு சிந்திக்கும் திறன் கொஞ்சமேனும் இருந்திருந்தால் இப்படி ஒரு வாதத்தை வைத்திருப்பார்களா?
அது சரி! சமாதி வழிபாட்டை ஆதரிப்பவர்களிடம் எப்படி சிந்தனைத் திறனை எதிர்பார்க்க முடியும்?
நபியின் மனைவியரை மணக்க அனுமதியில்லை

நபிகள் நாயகம் உயிருடன் மண்ணறையில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு அவர்கள் எடுத்துக் காட்டும் அடுத்த ஆதாரம், நபிகள் நாயகத்தின் மனைவிமார்களை நாம் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதைக் குறிப்பிடுகிறார்கள்.
உயிருடன் உள்ளபோது அவர்களின் மனைவிமார்களைத் திருமணம் செய்யக் கூடாது என்றால் அது சரி. நபிகள் நாயகம் இறந்ததற்குப் பிறகும் அவர்களது மனைவியர்களைத் திருமணம் செய்யக் கூடாது என்றால் என்ன பொருள்? நபிகள் நாயகம் இன்னும் உயிருடன் வாழ்ந்து வருகிறார்கள் என்று தானே அர்த்தம்.
இவ்வாறு இந்த நவீன பரேலவிகள் பிதற்றுகிறார்கள்.
நபிகள் நாயகத்திற்கு அல்லாஹ் பல்வேறு தனிச்சிறப்புகளை வழங்கி யிருக்கிறான். அவர்களது உடலை மண் தின்றுவிடாது என்பதைப் போன்று அவர்களது இறப்பிற்குப் பிறகு அவர்களது மனைவியரை மணக்கக் கூடாது என்பதையும் அல்லாஹ் ஒரு சிறப்புச் சட்டமாக ஆக்கி வைத்துள்ளான்.
நபியின் மரணத்திற்குப் பிறகு அவர்களின் மனைவியர்களை மணக்கக் கூடாது என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான்.
இதிலிருந்து நபிகள் நாயகம் உயிருடன் இல்லை என்பது தான் தெளிவே தவிர அவர்கள் உயிருடன் வாழ்ந்து வருகிறார்கள் என்று புரிந்து கொள்ள முடியாது.

நம்பிக்கை கொண்டோரே! நபியின் வீடுகளில் அனுமதிக்கப் பட்டால் தவிர உண்பதற்கு நுழையாதீர்கள்! அவரது பாத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருக் காதீர்கள்! மாறாக அழைக்கப்பட்டால் செல்லுங்கள்! உணவு உட்கொண் டதும் சென்று விடுங்கள்! பேச்சில் லயித்து விடாதீர்கள்! இது நபிக்குத் தொந்தரவாக இருக்கும். உங்களிடம் (கூற) அவர் வெட்கப்படுவார். உண்மை(யைக் கூறும்) விஷயத்தில் அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். (நபியின் மனைவியரான) அவர்களிடம் எதையேனும் நீங்கள் கேட்டால் திரைக்கப்பால் இருந்தே கேளுங்கள்! இதுவே உங்கள் உள்ளங்களுக்கும், அவர்களின் உள்ளங்களுக்கும் தூய்மையானது. அல்லாஹ்வின் தூதரை நீங்கள் தொந்தரவு செய்யக் கூடாது. அவருக்குப் பின் ஒருபோதும் அவரது மனைவியரை நீங்கள் மணக்கவும் கூடாது. இது அல்லாஹ்விடம் மகத்தானதாக இருக்கிறது.
அல்குர்ஆன் 33:53

அவருக்குப் பின் அவரது மனைவியரை மணக்கக் கூடாது என்றால் அதன் பொருள் என்ன?
நபிகள் நாயகம் இறந்து விடுவார்கள். அவரது இறப்பிற்குப் பிறகு யாரும் அவர்களது மனைவியர்களை மணக்க கூடாது என்பது தானே இதன் பொருள்.
நபிகள் நாயகம் இறந்து விட்டார்கள். உயிருடன் இல்லை என்பதை எந்த வசனம் தெளிவாகப் பறை சாற்றுகின்றதோ அதையே நபிகள் நாயகம் உயிருடன் வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு இவர்கள் ஆதாரம் காட்டுகிறார்கள் எனில் இவர்கள் எந்த அளவுக்கு மூடர்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடிகின்றது.
மேலும் இறைமறை வசனம் நபிகள் நாயகம் மரணிப்பவரே என்பதை தெளிவாக எடுத்துரைத்து விட்டது.
(முஹம்மதே!) நீர் மரணிப்பவரே. அவர்களும் மரணிப்போரே.
அல்குர்ஆன் 39:30
(முஹம்மதே!) உமக்கு முன் எந்த மனிதருக்கும் நாம் நிரந்தரத்தை ஏற்படுத்தவில்லை. நீர் மரணித்து விட்டால் அவர்கள் நிலையாக இருப்பவர்களா? ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே. நன்மை, தீமையின் மூலம் பரீட்சித்துப் பார்ப்பதற்காக உங்களைச் சோதிப்போம். நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!அல்குர்ஆன் 21:34, 35

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபித்தோழர்கள் காலத்திலேயே மரணத்தைத் தழுவி பர்ஸக் எனும் திரை மறைவு வாழ்க்கைக்குச் சென்று விட்டார்கள்.
(நபியவர்கள் மரணித்த போது) அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போற்றி விட்டு, எவர் முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ்வை எவர் வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் அல்லாஹ் (என்றும்) உயிராய் இருப்பவன்; அவன் இறக்கமட்டான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும் என்று சொன்னார்கள். மேலும், (முஹம்மதே!) நீர் மரணிப்பவரே. அவர்களும் மரணிப்போரே என்னும் (39:30) இறை வசனத்தையும், முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்என்னும் (3:144) இறை வசனத்தையும் ஓதினார்கள். உடனே மக்கள் (துக்கத்தால் தொண்டையடைக்க) விம்மியழுதார்கள்.
நூல்: புகாரி 3668

நபிகள் நாயகம் மரணித்து விட்டார்கள் - உயிருடன் இல்லை என்பதை சஹாபாக்கள் உறுதியாக அறிந்து கொண்ட காரணத்தினால் தான் அபூபக்கர் (ரலி) அவர்களை ஆட்சியாளராக ஒருமித்து ஏற்றுக் கொண்டார்கள்.
பர்ஸக் வாழ்க்கைக்கு சென்று விட்ட நபிகள் நாயகத்தை உலகத்தில் உள்ளதைப் போன்று இன்னும் உயிருடன் வாழ்ந்து வருகிறார்கள் என்று சொன்னால் அது குர்ஆனுக்கு எதிரான கருத்தாகும். பகிரங்க வழிகேடாகும்.
--source onlinepj --

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்