"சொல்லப்படும் கருத்துக்களை, செவி தாழ்த்திக் கேட்டு, அதில் நல்லவற்றைப் பின்பற்றும் என் அடியார்களுக்கு, (நபியே!) நீர் நற்செய்தி கூறுவீராக". (அல்குர்ஆன் 39:17,18)

மய்யித் செருப்பின் ஓசையை கேட்குமா?


'இறந்தவர்கள் செவியேற்பார்கள்' என்ற பிழையான கருத்தை சமூகத்தில் கூறி வருபவர்கள் தங்கள் கூற்றிற்கு முன்வைக்கும் ஆதாரங்களையும், அவற்றிற்கான தக்க பதில்களையும் தொடராக நாம் பார்த்து வருகிறோம். இந்தத் தொடரில் அவர்கள் முன்வைக்கும் ஆதாரங்களையும் அவற்றிற்கான பதில்களையும் நோக்குவோம்.
வழிகேடர்களின் மூன்றாவது ஆதாரம்:
'ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு, அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை மய்யித் செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து 'முஹம்மத் எனும் இந்த மனிதரைப் பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?' எனக் கேட்பர். அதற்கவன் 'இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்' என்பான். பிறகு '(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று அவனிடம் கூறப்பட்டதும் அவன் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பான். நிராகரிப்பவனாகவோ, நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், 'எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்' என்பான். அப்போது அவனிடம் 'நீயாக எதையும் அறிந்ததுமில்லை, (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை' என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கத்துவான். அறிவிப்பவர் அனஸ்(ரழி), நூல்: புஹாரீ 1338,1374
இந்த ஹதீஸிலிருந்து இவர்கள் முன்வைக்கும் வாதம்: ////இறந்தவர்கள் 'செருப்பின் ஓசையை கேட்பதாக' இந்த ஹதீஸில் இடம் பெற்றுள்ளது. ஆதலால் இறந்தவர்கள் எதையும் கேட்பார்கள் என்று நம்ப வேண்டும்.///
எமது பதில்:
ஹதீஸ்களை எப்படி புரிய வேண்டும் என்ற அடிப்படை ஞானமில்லாததின் வெளிப்பாடாகத்தான் இவர்களுக்கு இந்த ஹதீஸை பிழையாக புரிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 'இறந்தவர்கள் கேட்கமாட்டார்கள்' என்பதற்கு எமது முதலாவது இதழில் ஏகப்பட்ட ஆதாரங்களை வழங்கினோம். அவற்றிற்கு முரண்படாத விதத்தில்தான் இந்த ஆதாரத்தையும் நாம் புரிதல் வேண்டும் என்பதை நாம் ஒவ்வொரு முறையும் ஞாபகமூட்டிக் கொள்கிறோம். 'செருப்பின் ஓசையை இறந்தவர் செவியுறுகிறார்' என்று மட்டும் நபி(ஸல்) அவர்கள் கூறியிருந்தால் இவர்களது வாதம் ஓரளவு நியாயமெனலாம். ஆனால் நபி(ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் இவ்வாறு கூறுகிறார்கள்
'ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு, அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை மய்யித் செவியேற்கும்' நாம் அடிக்கோடிட்டுக் காட்டிய இடத்தின் வாசகத்தை நன்கு கவனியுங்கள். அடக்கம் செய்து விட்டுத் திரும்பும் போது என்ற வார்த்தையை இங்கு நபி(ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள். இந்த வார்த்தையிலிருந்து நாம் புரியும் அம்சம் என்ன? அடக்கம் செய்து விட்டு திரும்பும் போது இறந்தவர்கள் செவியுறுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து 'இதல்லாத ஏனைய நேரங்களில் இறந்தவர்கள் எதையும் செவியுறமாட்டார்கள்' என்று நாம் புரியலாம்.
எனவே தோழர்கள் அடக்கம் செய்து விட்டுத் திரும்பும் போது மாத்திரம் அவர்களின் செருப்பின் ஓசையை இறந்தவருக்கு இறைவன் கேட்க வைக்கிறான் என்பதே இந்த ஹதீஸிற்கான சரியான விளக்கமாகும். இந்த விளக்கத்தை சரிவரப் புரியாததினால்தான் அத்வைதிகளும் ஏனைய வழிகேடர்களும் இறந்தவர்கள் செவியுறுவார்கள் என்பதற்கு இந்த ஹதீஸை ஆதாரமாகக் காண்பித்து வருகின்றனர்.
ஹதீஸின் பின் வாசகம் தரும் கருத்து என்ன?
நாம் கூறுவது இறந்தவர்களுக்கு கேட்கும் என்றால் அவர்களுக்கு அங்கு நடப்பதும் எமக்குக் கேட்க வேண்டும். ஆனால் எம்மால் கேட்க முடியாது. காரணம் எமக்கும் அவர்களுக்குமிடையே பாரிய திரை ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்லாம் கூறுகின்றது. செருப்பின் ஓசையை கேட்பது மாத்திரம் விதிவிலக்கானது ஆகும். எனவேதான் இந்த ஹதீஸின் இறுதிப்பகுதியில் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்.
'பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கத்துவான்'
'மனிதர்களும் ஜின்களும் கேட்கமாட்டார்கள்' என்று தெளிவாக நபி(ஸல்) அவர்கள் கூறுவதிலிருந்தும் 'இறந்தவர்களை உம்மால் கேட்க வைக்க முடியாது' என அல்லாஹ் அல்குர்ஆனின் 27:80 வது வசனத்தில் கூறுவதிலிருந்தும் 'நாம் பேசுவதை இறந்தவர்கள் கேட்க மாட்டார்கள். அவர்களுக்கு மண்ணறைகளில் நடப்பது எமக்கு தெரியாது. ஆனால் செருப்பின் ஓசையை மாத்திரம் அவர்கள் கேட்பார்கள். அதுவும் திரும்பிச் செல்கின்ற நேரத்தில் மாத்திரமே அந்த ஓசையை இறந்தவர்களுக்கு இறைவன் கேட்கச் செய்கிறான்.' என்றுதான் இந்த ஆதாரத்தை நாம் விளங்க வேண்டும். அவ்வாறு விளங்குவதுதான் ஏற்புடையதாகும். இதற்கு மாற்றமாக இறந்தவர்கள் செவியுறுவார்கள் என பொதுவாக இந்த ஆதாரத்தை நாம் விளங்கினால் அல்குர்ஆனில் இடம் பெற்ற 27:80 வது வசனத்தை மறுக்க வேண்டிய நிலைதான் ஏற்படும் என்பதை இந்த வழிகேடர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆதலால் ஆதாரங்களின் அர்த்தங்களை அனர்த்தமாக்கும் காரியங்களை செய்வோரின் உண்மை முகங்களை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
வழிகேடர்களின் நான்காவது ஆதாரம்:
நபிமார்கள் உயிருடன் உள்ளார்கள். அவர்கள் தங்களது மண்ணறைகளில் தொழுது கொண்டிருக்கிறார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரழி), நூல்: முஸ்னத் அபீ யஃலா 3425
இதுவும் பொருத்தமற்ற ஆதாரமாகும். நபிமார்கள் மண்ணறைகளில் தொழுது கொண்டிருக்கிறார்கள் என்பதிலிருந்து இறந்தவர்கள் கேட்பார்கள் என வாதிடுவது முட்டாள்தனத்தின் உச்சகட்டமாகும். ஒரு வாதத்திற்கு இவர்களின் கருத்து உண்மையென வைத்துக் கொண்டாலும் நபிமார்கள் மாத்திரம் செவியுறுவார்கள் என்றுதான் வாதிட வேண்டும். இவர்கள் அவ்லியா என அடையாளப்படுத்துபவர்களெல்லாம் கேட்பார்கள் என வாதிடுவது மற்றுமொரு முட்டாள்தனமாகும்.
(தொடரும் இன்ஷாஅல்லாஹ்)
இதுபற்றிய மேலும் சில பதிவுகள் .....
  1. காபிர்களைப் பற்றி இறங்கிய வசனங்களை, மூமின்களுக்குப் பயன்படுத்தலாமா?   அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  2. இறந்தவர்கள் செவியேற்பார்களா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  3. மய்யித் செருப்பின் ஓசையை எப்படி கேட்கிறது   அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  4. டாக்டரிடம் கேட்பது போல் அவ்லியாக்களிடம் கேட்பது சரியா?  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  5. கேட்கமாட்டார்கள் என்றால் ஸலாம் சொல்வது ஏன்  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  6. யூசுப் நபியின் சட்டை ஆதாரமாகுமா?   அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
  7. ஈஸா நபியின் அழைப்புக்கு நபி(ஸல்) அவர்கள் எப்படி பதில் அளிப்பார்கள்? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  8. உஹத் மலையிடம் உதவி தேடினார்களா ?   அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  9. இப்ராஹீம் நபி பறவையை அழைத்தார்களா ?  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் 
  10. யா ஜிபாலு (மலைகளே) என்று அல்லாஹ் அழைத்துள்ளானே அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  11. யா சாரி என்று உமர் (ரலி) அழைத்தார்களா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  12. சுலைமான் நபி இறந்தவர்களிடம் உதவி தேடினாரா? அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  13. ரஹ்மத்துடைய கூட்டத்தார் களிடத்தில்  உங்களை தேவைகளை தேடிபெற்றுக்கொள்ளுங்கள் இது சரியா ?  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  14. மணித சஞ்சாரம் இல்லாத இடத்தில் மாட்டிவிட்டால்  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  15. இறந்தவர்கள் இவ்வுலகில் உள்ளதை அறிகிறார்கள் என்பதை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிந்து வைத்திருந்தார்களா அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  16. யா முஹியத்தீன் என்று அழைக்கலாமா   அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  17.  நபிகளாருக்கு உதவி செய்த மூஸா நபி அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
  18. மவ்லூத் மறுப்புக்கான காரணம்  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

இறந்தவர்கள் செவியேற்பார்களா?

அத்வைதிகளின் அர்த்தமற்றவாதங்களுக்கு ஆதாரவாயிலாக அளிக்கப்படும் மறுப்பு தொடர்-1  
ஒவ்வொரு காலகட்டத்திலும் வழிகேடான சிந்தனை கொண்டவர்கள் தங்களது வழிகேடுகளை இவ்வுலகில் பரப்ப பல்வேறு முயற்சிகள் எடுத்து வந்ததை வரலாறு எமக்கு சான்று பகர்கின்றது. நாங்களும் குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களையே முன்வைக்கிறோம் என்று கூறிக்கொண்டு சில போலி ஆதாரங்களையும் வாதங்களையும் முன்வைத்து மக்களை இவர்கள் வழிகெடுத்து வருகின்றனர். இவர்களின் வழிகேடுகள் ஒன்றல்ல இரண்டல்ல பலநூறு வழிகேடுகளை பட்டியலிட்டே கூறுமளவிற்கு நிறைந்துள்ளது. நாம் இப்பகுதியில் இவர்கள் சமுதாயத்தில் பரப்பிவரும் தவறான கருத்தான “இறந்தவர்கள் செவியேற்பார்கள்” என்ற வாததத்திற்கு ஆதாரரீதியாகவும் தர்க்கரீதியாகவும் தக்கபதில்களை இங்கு வெளியிடுகிறோம். 

உலக தொடர்புகளற்ற மண்ணறை வாழ்க்கை

ஒருவர் இறந்துவிட்டால் அவருக்கும் இவ்வுலகத்திற்குமிடையிலான சகல தொடர்புகளும் அவரை விட்டும் துண்டிக்கப்படும். இவ்வுலக வாழ்க்கையின் நிலைகளும் கப்ருடைய வாழ்க்கையின் நிலைகளும் பல விதங்களில் வித்தியாசப்படுகின்றன இந்த சாதாரண அடிப்படையை நாம் கவனமாக சிந்தித்தாலேயே இறந்தவருக்கு நாம் பேசும் எப்பேச்சும் காதில் விழாது என்பதை உறுதி செய்யலாம்.

இன்று இச்சமூகத்தில் அத்வைதிகள் என்றழைக்கப்படும் வழிகேடர்களும் இன்னும் சில வழிகேடர்களும் இறந்துபோனவர்கள் செவியேற்பார்கள் என்ற தவறான கருத்தை சமூகத்தில் புகுத்தி வருகின்றனர். அதற்கு வலுசேர்ப்பதற்காக ஆதாரபூர்வமான செய்திகளை தங்களது மனோஇச்சைக்கு ஏற்ப வளைத்தும் இன்னும் சில போலிசெய்திகளை ஆதாரமாகக் கொண்டும் இறந்தவர்கள் செவியுறுவார்கள் என்றும் பிரச்சாரம் செய்து வருகின்றனர் உண்மையில் இறந்தவர்கள் செவியுறுவார்கள் என்பதுதான் இஸ்லாமிய கருத்தாக இருக்குமெனில் அதை மக்களிடையில் தீவிரமாக பிரச்சாரம் செய்வதில் நாம் ஒரு போதும் பின்வாங்கப்போவதில்லை.

ஆனால் இதை நாம் ஆய்வு செய்யப்புகுந்தால் இறந்தவர்கள் செவியேற்கமாட்டார்கள் என்பதுதான் இஸ்லாமிய கருத்தாக அமையப் பெற்றிருப்பதை காணலாம். இறந்தவர்கள் செவியுறமாட்டார்கள் என்பதை தெளிவுபடுத்தும் ஆதாரங்களை தற்போது ஒவ்வொன்றாக அலசுவோம்.

சான்று:1 முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும்போது என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள் என்று கூறுவான் .அவ்வாறில்லை இது(வாய்) வார்த்தைதான். அவன் அதை கூறுகிறான் அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள்வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது(23-100)

இறந்தவருக்கும் இவ்வுலகில் வாழ்பவருக்கும் எவ்வித தொடர்புமில்லை என்பதற்கு இந்த வசனம் பெரிய ஆதாரமாகும் நாம் பேசினால் அதை இறந்தவர்கள் செவியுறமாட்டார்கள் என்பதை தெளிவாக இந்த அல்குர்ஆன் வசனம் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறது

இறந்தவர்கள் செவியுறமாட்டார்கள் என்று நேரடியாக இவ்வசனத்தில் எங்கும் கூறப்படவில்லை மாறாக இறந்தவர்களுக்கும் உயிருடன் இருப்பவர்களுக்குமிடையே ஒரு பர்ஸஹ் ஏற்படுத்தப்படும் என்று அல்லாஹ் கூறுகிறான் பர்ஸஹ் என்ற வார்த்தையின் சரியான அர்த்தம் என்ன? அதன் பிரயோகங்கள் என்ன? என்பதை தெளிவாக அறிந்தால் இறந்தவர்கள் செவியுறமாட்டார்கள் என்பதை உறுதிசெய்யலாம்.

பர்ஸஹ் என்றால் என்ன?

பர்ஸஹ் என்றால் இரு பொருட்களுக்கிடையில் திரையாக அமையப்பெரும் விடயத்திற்கு கூறப்படும். பர்ஸஹ் ஏற்படுத்தப்பட்டால் ஒரு பக்கத்தில் உள்ளது மறுபக்கத்திலுள்ள பகுதிக்கு புரியாது அந்தளவு இரும்புத்திரை என்று அதைக் கூறலாம்.

இந்த வார்த்தைக்கு திரை, தடை என அர்த்தம் என்பதை அறபு மொழியின் பிரபல இரு அகராதிகள் கூட உறுதிசெய்கின்றன

பர்ஸஹ்: இரு பொருட்களுக்கிடையிலாலான தடை (தஹ்தீபுல்லுஹா 7:271,முஹ்தாருஸ்ஸிஹாஹ்:1-32)

இவ்வசனத்தில் கையாளப்பட்டுள்ள "பர்ஸஹ்" என்ற வார்த்தைக்கு இரும்புத்திரை என்று அர்த்தமாகும் இதே வார்த்தை அல்குர்ஆனில் பல இடங்களில் கையாளப்பட்டுள்ளது.

இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்ளான் இரண்டிற்குமிடையே ஒரு திரை உள்ளது ஒன்றையொன்று கடக்காது-55-20)

அவனே இரண்டு கடல்களை ஒன்று சேர்த்துள்ளான் இது மதுரமாகவும் தாகம் தீர்ப்பதாகவும் உள்ளது அது உப்பாகவும் கசப்பாகவும் உள்ளது அவ்விரண்டுக்குமிடையே ஒரு திரையையும் வலுவான தடுப்பையும் அவன் ஏற்படுத்தியுள்ளான்-25-53)

இரு கடல்களுக்கிடையில் இரும்புத்திரை ஏற்படுத்தப்பட்டிருப்பதாக அல்குர்ஆன் கூறுகின்றது அதனால் ஒரே கடலில் இருந்து இரு விதமான சுவைகள் இருப்பதாக விஞ்ஞானிகளால் இக்காலத்தில் கண்டறியப்பட்டுள்ளது இதில் ஏற்படுத்தப்பட்டுள்ள பர்ஸஹ் என்ற இரும்புத்திரை எம் கண்ணுக்கு தெரிவதில்லை

சாதாரண இவ்வுலகில் பர்ஸஹ் ஏற்படுத்தப்பட்டாலேயே அதை எம்மால் புரிந்து கொள்ள முடியவில்லையென்றால் ஒருவர் இறந்ததன் பிற்பாடு அவர் இவ்வுலகில் நடப்பதை அறிவார் என வாதிடுவது அறிவுபூர்வமானதா? என்பதை நாம் சிந்திக்கக்கடமைப்பட்டுள்ளோம்.

இறந்தவர்களை கேட்க வைக்க முடியாது என்று கூறும் அல்குர்ஆன் வசனம்:

சான்று:2

நீர் இறந்தோரை செவியேற்கச் செய்ய முடியாது! அழைப்பை புறக்கணித்து ஓடும் செவிடர்களைக் கேட்க செய்ய உம்மால் முடியாது. குருடர்களின் வழிகேட்டை நீக்கி அவர்களுக்கு நேர்வழிகாட்டுபவராகவும் நீர் இல்லை. நமது வசனங்களை நம்பி முஸ்லிம்களாக இருப்போர்க்கே நீர் கேட்கச் செய்வீர் (27:80)

இறந்தவர்கள் செவியுறமாட்டார்கள் என்ற ஆதாரங்களை அறிந்த பிற்பாடும் எவரேனும் வேண்டுமென்று வரட்டுப்பிடிவாதத்தில் இருந்தால் அவர் அல்லாஹ் கூறியதை மறுக்கிறார் அல்லது அதிகப்பிரசிங்கித்தனம் செய்கிறார் என்பதுவே அதன் அர்த்தமாகும் என்பதை இங்கு எச்சரிக்கையாக நாம் கூறிக் கொள்கிறோம்.

எதிர்வாதம்: இந்த வசனத்தில் அல்லாஹ் இறந்தவர்கள் என கையாண்டிருப்பது காபிர்களையே குறிக்கின்றது எதையும் கூறி விளங்காதவர்களை இறந்தவர்கள் என அழைக்கப்படுகின்றது அதனால்தான் அவ்வசனத்தில் இறுதியில் நம்பிக்கை கொண்டோர்களை நீர் செவியுற வைக்கமுடியும் என இடம் பெற்றுள்ளது இதிலிருந்து இறந்தவர்கள் என்பது உண்மையிலே இறந்தவர்களை குறிக்கவில்லை உள்ளம் இறந்தவர்கள் என இதைஎடுத்துக்கொள்ள வேண்டும்.

தெளிவு: இவர்களின் விளக்கம் வெளிரங்கத்தில் பார்க்கும் போது நியாயமானது போன்று தென்பட்டாலும் கவனமாக நாம் இதை சிந்தித்தால் அவர்கள் முன்வைக்கும் வாத்திலேயே அவர்களுக்கு மறுப்பு உண்டு என்பதை காணத் தவறிவிட்டார்கள் அல்லது மறைத்துவிட்டார்கள்

இறந்தவர்கள் செவியுறுவார்கள் என எமதூரில் பிரச்சாரம் செய்யும் மௌலவி அப்துர்ரஊபை எடுத்துக் கொள்வோம் இறந்தவர்கள் செவியேற்கமாட்டார்கள் என்ற கருத்தை இவருக்கு புரிய வைப்பது என்பது முடியைக்கட்டி மலையை இழுப்பது போன்றாகும் என்று ஒருவர் எம்மிடம் உதாரணம் கூறுகிறார் என வைத்துக் கொள்வோம் இதன் அர்த்தம் முடியைக்கட்டி மலையை இழுக்கவும் முடியாது மௌலவி அப்துர்ரஊபிற்கு இதை புரிய வைக்கவும் முடியாது

கவனமாக சிந்தியுங்கள் மௌலவி அப்துர்ரஊபிற்கு ஏதோ ஒரு வழியில் முயற்சி செய்து அவருக்கு குறித்த விடயத்தில் தெளிவை வழங்கிடலாம் ஆனால் முடியைக் கட்டி மலையை ஒரு போதும் இழுக்க முடியாது

இதே மாதிரியான உதாரணத்தைத்தான் அல்லாஹ் இங்கு கூறுகிறான்.

அதாவது காபிர்கள் மார்க்கத்தை புரியாததற்கு இறந்து போனவர்கள் கேட்காமலிருப்பதை உதாரணமாகக் கூறுகிறான்

காபிர்களுக்கு ஏதோ ஒரு வழியில் முயற்சி செய்து கேட்க வைத்திடலாம், தெளிவை வழங்கிடலாம் ஆனால் இறந்து போனவர்களை கேட்க வைக்க முடியாது இதுதான் இந்த வசனத்தை சரியாக நாம் புரிய வேண்டிய முறையாகும்.

ஒன்றை மட்டகரமாகக் கருதியோ அல்லது ஒன்றை உயர்வானதாகக் கருதியோ உதாரணமாக கூறும்போது அவ்விடயம் எதற்கு உதாரணம் கூறப்படுகிறதோ அதற்கு முற்றிலும் மாறுபட்ட நிலையைக் கொண்டிருக்க வேண்டும் என்பது புத்திசாலிகள் அனைவரும் ஏற்றுக் கொண்ட ஒரு தத்துவமாகும் இவர்களுக்கு மார்க்கம்தான் தெரியவில்லை என்றாலும் உலக விவகாரத்திலும் இவர்களுக்கு போதிய விளக்கமில்லை என்பது இங்கு தெரிய வருகின்றது

இவர்கள் இலகுவாகப் புரிய மற்றுமொரு உதாரணத்தையும் தருகின்றோம் இப்றாஹீம் என்பவன் சிங்கத்தைபோல என்கிறோம் இவ்வாறு நாம் கூறுவதால் இப்றாஹீம் சிங்கத்தை விட வீரனாகி விட்டான் என்றோ அல்லது சிங்கத்தின் பலத்திற்கு சமனாகி விட்டான் என்றோ யாரும் முடிவு செய்யமாட்டார்கள் இஸ்மாயீல் என்பவன் யானையைப் போல் பலசாலி என்கிறோம் இவ்வாறு நாம் கூறுவதால் இஸ்மாயீல் யானையை விட பலசாலியாகி விட்டான் என்றோ அல்லது யானையின் பலத்திற்கு சமனாகி விட்டான் என்றோ யாரும் முடிவு செய்யமாட்டார்கள்

மாறாக மனிதர்களில் இப்றாஹீம் சற்று வீரமானவன் மனிதர்களில் இஸ்மாயீல் சற்று பலமானவன் இவ்வாறுதான் நாம் முடிவுசெய்வோம். அவ்வாறுதான் முடிவு செய்யவும் வேண்டும். சிங்கத்தை உதாரணமாக காண்பித்தால் அது இப்றாஹீமை விட வீரமாக இருக்க வேண்டும். யானையை உதாரணமாக காண்பித்தால் அது இஸ்மாயீலை விட பலமாக இருக்க வேண்டும். அல்லாத பட்சத்தில் உதாரணம் காட்டுவது பொறுத்தமற்றது, முட்டாள்தனமானது.

இப்போது இவர்களது வாதத்திற்கு வருவோம் இறந்து போனவர்களை கேட்க வைக்க முடியாது என்றால் அது உண்மையில் இறந்து போனவர்களைக் குறிக்கவில்லை மாறாக காபிர்களைத்தான் குறிக்கின்றது இறந்து போனவர்களுக்கு ஒப்பாகவே இறைவன் காபிர்களை இங்கு குறிப்பிடுகிறான் இதுதான் இவர்களது வாதம்

இவ்வாறு பார்த்தால் காபிர்களை எவ்வாறு கேட்க வைக்க முடியாதோ அது போன்றுதான் இறந்தவர்களையும் கேட்க வைக்க முடியாது என்று எமது வாதத்தை இவர்கள் பலப்படுத்துகிறார்கள். ஏற்கனவே மௌலவி அப்துர்ரஊபிற்குப் புரியாததை முடியினால் மலையை இழுக்கும் உதாரணத்தைக் கொண்டு நாம் ஒப்பிட்டதையும் சிங்கம் சம்பந்தமாகவும் யானை சம்பந்தமாகவும் நாம் கூறிய உதாரணத்தை மனதில் நிறுத்திக்கொண்டு இவர்கள் கூறும் ஐந்து சதத்திற்கும் பெறுமதியற்ற வாதத்தையும் சற்று ஒப்பிட்டுப்பார்த்தால் இவர்களது முரண்பாடு எமக்கு தெளிவாக புரியும் என்பதில் சந்தேகமில்லை.

அழைத்தால் கேட்கமாட்டார்கள் என்று கூறும் இறைவசனம்:

இறந்து போனவர்களை அழைத்தால் எமது அழைப்புக்கு அவர்கள் பதில் கூறுவார்கள் என அத்வைதிகள் கூறி வருகின்றனர். முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானியை ஆயிரம் முறை தனியே இருந்து அழைத்தால் எமது அழைப்புக்கு அவர் பதில் தருவார் என்று இவர்கள் ஆதரிக்கும் மௌலீத் புத்தகம் கூறிக் கொண்டிருக்கிறது.

இவர்களின் வழிகெட்ட இக்கருத்திற்கு பின்வரும் வசனம் தெளிவாகவே சாவுமணி அடிக்கிறது

சான்று:3
நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தரமாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.(35:14)

எவ்வளவு தெட்டத் தெளிவாக இந்த இறைவசனம், இறந்தவர்களை அழைத்தால் அவர்கள் கேட்கமாட்டார்கள் எனக்கூற‌, அது, இவர்களது கண்களுக்கு தெரியவில்லையா? அல்லது இவர்கள் தெரிந்து கொண்டே இதை மறைக்கிறார்களா? என்பது புரியாத புதிராகவே உள்ளது. அறியாமல் இவர்கள் இந்த நச்சுக்கருத்தை ஆதரித்திருந்தால் அக்கருத்தை விட்டும் உடனே நீங்கிவிட வேண்டும். அல்லது தெரிந்துகொண்டே இக்கருத்தை இவர்கள் ஆதரித்து வந்தால் படைத்த இறைவனை இவர்கள் அஞ்சிக் கொள்ள வேண்டும் என்பதை ஒரு நஸீஹத்தாகவே நாம் கூறிக் கொள்ள விரும்புகிறோம்.
வானவர்கள் மூலமே ஸலாம் நபி(ஸல்) அவர்களுக்கு எற்றிவைக்கப்படும்:

எமது உயிரிலும் மேலான இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மீது நாம் ஸலாம் கூறினால் அது அவர்களுக்கு வானவர்கள் மூலம் எற்றிவைக்கப்படும். நாம் அவர்களுக்கு அருகில் நின்று ஸலாம் கூறினாலும் சரி அல்லது தூரத்தில் நின்று கொண்டு ஸலாம் கூறினாலும் சரி அவைகள் அனைத்தும் வானவர்கள் மூலமாகவே நபி(ஸல்) அவர்களுக்கு எற்றிவைக்கப்படும்.

சான்று:4
அல்லாஹ்வுக்கு பூமியில் சுற்றித்திரியும் சில வானவர்கள் உள்ளனர். எனது சமுதாய மக்களின் ஸலாமினை அவர்கள் எனக்கு எற்றி வைக்கின்றனர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர் அப்துல்லாஹிப்னு மஸ்ஊத்(ரழி) ஆதாரம் இப்னுஹிப்பான் இலக்கம்-915

இறந்து போனவர்கள் செவியுறுவார்கள் என்றால் நபி(ஸல்) அவர்களுக்கு நாம் ஸலாம் கூறினால் அதை எற்றி வைக்க ஏன் வானவர்கள் தேவைப்படுகிறார்கள்? அருகில் நின்று கொண்டு: கூறினால் தூரத்தில் நின்று கொண்டு கூறினால் என்று பிரித்துக் கூறுவதற்கு மார்க்கத்தில் எவ்வித ஆதாரமும் கிடையவே கிடையாது. எங்கு நின்று கொண்டு கூறினாலும் அவைகளை வானவர்கள்தான் எற்றிவைக்கின்றார்கள்.

வானவர்கள் எற்றிவைக்கின்றார்கள் என்றாலே நபி(ஸல்) அவர்களுக்கு நேரடியாக‌ விளங்காது என்பது தெளிவாகின்றது. நபி(ஸல்) அவர்கள்தான் இவ்வுலக மக்களில் .இறைவனை அஞ்சும் மிகப்பெரும் வலியுல்லா‍ஹ் (இறைநேசர்). அவர்களுக்கே நாம் அழைத்தால் புரியாது என்றால் ஏனையவர்களை பற்றி நாம் கூறவா வேண்டும்? சிந்தியுங்கள்!

எனவே இதிலிருந்து இறந்து போன நபி(ஸல்) அவர்கள் கூட நாம் பேசுவதை கேட்கமாட்கள். நாம் அவர்களுக்கு கூறும் ஸலாம் மாத்திரம் வானவர்கள் மூலம் எற்றி வைக்கப்படும். நாம் அவர்களுக்கு கூறும் ஸலவாத் எடுத்துக் காண்பிக்கப்படும் இது சம்பந்தமாக ஆதாரபூர்வமான செய்தியொன்று ஹதீஸ்கிரந்தங்களில் இடம் பெற்றுள்ளது

(நீங்கள் என்மீது கூறும்) ஸலவாத் எனக்கு எடுத்துக்காண்பிக்கப்படும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய போது அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் இறந்து விட்ட பிறகு நாங்கள் (உங்கள் மீது) கூறும் ஸலவாத் எப்படி எடுத்துக்காண்பிக்கப்படும்? என்று ஸஹாபாக்கள் கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதா(ஸல்) அவர்கள் நிச்சயமாக அல்லாஹுத்தஆலா பூமிக்கு நபிமார்களின் உடலை சாப்பிடுவதை தடை செய்துள்ளான் என்று கூறினார்கள். ஆதாரம் அபூதாவுத்:1047- இப்னுமாஜா:1085- நஸாயீ:1374 முஸ்னத் அஹ்மத்:16162

மேலே இடம் பெற்ற ஹதிஸின் பிரகாரம் ஸலவாத் நபி(ஸல்) அவர்களுக்கு கேட்கும் என இடம் பெறவில்லை எடுத்துக்காட்டப்படும் என்றுதான் இடம் பெற்றுள்ளது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்

இறந்தவர்களின் பேச்சுக்களை நாம் கேட்க இயலாது

நமது பேச்சு இறந்தவர்களின் காதில் விழுவது எப்படி சாத்தியமற்றதாக உள்ளதோ அது போன்றுதான் இறந்தவர்களின் பேச்சுக்களும் எமது காதில் விழாது என இஸ்லாம் கூறுகின்றது இந்த அடிப்படை தெரியாமல்தான் இவர்கள் குழம்பிப் போயுள்ளார்கள்

சான்று:5- ''ஜனாஸா (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போது, அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்ததாக இருக்குமானால், என்னை விரைந்து செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால், கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறே கூறப்படும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும். மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர் அபூஸயீத் அல்குத்ரீ(ரழி) ஆதாரம் புஹாரீ இலக்கம்:1316

இறந்தவர்கள் பேசுவதை நாம் கேட்க முடியாது என இடம் பெற்றிருக்கும் மேற்குறித்த ஆதாரமும் இறந்தவர்களுக்கும் எமக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றது

இறந்தவர்கள் நாம் கூறுவதைக் கேட்பார்கள் என்றிருக்குமானால் நிச்சயம் அவர்கள் பேசுவதைம் எம்மால் கேட்க முடியும் என்றுதான் வாதிட முடியும் ஆனால் இறந்தவர்களின் ஓசைகளை மனிதர்கள் கேட்க முடியாது என இஸ்லாம் கூறுகின்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்ஷா அல்லாஹ்! அடுத்த தொடரில் நாம் இறந்தவர்கள் கேட்பார்கள் என்பதற்கு வழிகெட்ட சாரார்கள் முன்வைக்கும் ஆதாரங்களையும் அவற்றிற்கான பதில்களையும் நோக்குவோம்.

அடுத்த தொடரை காண இங்கே கிளிக் செய்யவும்

ntj.com

இறந்தவர்கள் இவ்வுலகில் உள்ளதை அறிகிறார்கள் என்பதை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிந்து வைத்திருந்தார்களா

'இறந்தவர்கள் செவியேற்பார்கள்' என்ற பிழையான கருத்தை சமூகத்தில் கூறி வருபவர்கள், தங்கள் கூற்றிற்கு முன்வைக்கும் ஆதாரங்களை தொடராக நாம் பார்த்து வருகிறோம்;. அவர்கள் முன்வைக்கும் ஏனைய ஆதாரங்களையும், அவற்றிற்கான தக்க பதில்களையும் இந்தத் தொடரில் நோக்குவோம்.
வழிகேடர்களின் ஏழாவது ஆதாரம்:
ஆயிஷா(ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட வீட்டினுள் நுழையும் போது எனது மேலாடையை கழட்டியவளாக நுழைவேன். எனது கணவரும் எனது தந்தையும்தானே உள்ளனர் என (மனதிற்குள்) சொல்லிக் கொள்வேன். அல்லாஹ்வின் மீதானையாக: உமர்(ரழி) அவர்கள் அடக்கம் செய்யப்பட்டவுடன் அவர்கள் மீது எனக்கிருந்த வெட்கத்தினால் எனது ஆடையை இறுக்கமாகக் கட்டிக் கொண்டே உள்ளே நுழைவேன். நூல்: அஹ்மத் 25660
இதிலிருந்து இவர்கள் முன்வைக்கும் வாதம்
///// ஆயிஷா(ரழி) அவர்கள் உமர்(ரழி) அவர்களுக்கு ஏன் வெட்கப்பட வேண்டும்? இறந்தவர்கள் இவ்வுலகில் உள்ளதை அறிகிறார்கள் என்பதை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிந்து வைத்திருந்த படியால்தான் தனது ஆடையை இறுக்கமாகக் கட்டிக் கொண்டு உள்ளே நுழைகிறார்கள். எனவே இறந்தவர்கள் கேட்பார்கள் என்பதற்கு இதுவும் நல்ல சான்றாகும். ///

எமது பதில்:
இவர்களது மடமைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது போலும். இறந்தவர்கள் எதையும் கேட்கமாட்டார்கள் என்ற அல்குர்ஆன் வசனத்தை ஓதி மக்களுக்கு விளக்கம் கொடுத்தவர் ஆயிஷா(ரழி) என்பதை எமது இரண்டாவது தொடரில் விளக்கியிருந்தோம். இவ்வாறான நிலையிலுள்ள ஆயிஷா(ரழி) அவர்கள் இறந்தவர்கள் கேட்பார்கள் என்ற நிலைப்பாட்டில் இருந்திருப்பார்களா? என்பதை இந்த மத்ஹபுப் பிரியர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
உமர்(ரழி) அவர்கள் மரணித்தாலும் அவர்கள் மீது ஆயிஷா(ரழி) அவர்கள் அளவு கடந்த மரியாதை வைத்திருந்தார்கள் என்பதனையும், மற்றவர்களை விட உமர்(ரழி) அவர்கள் சற்று வித்தியாசமானவர்கள் என்பதை ஆயிஷா(ரழி) அவர்கள் தெளிவாகவே உணர்ந்திருந்தார்கள் என்பதனையும் இந்த ஆதாரம் சுட்டிக்காட்டுகின்றது.
இறந்தவர்கள் செவியேற்பார்கள் என்பதற்கு இதில் துளியளவும் வாதம் கிடையாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின் பேருதவியால் 'இறந்தவர்கள் செவியேற்பார்களா?' எனும் இத்தொடரில் 'இறந்தவர்கள் செவியேற்பார்கள்' என்பதற்கு வழிகேடர்களான அத்வைதிகளும் சுன்னத் வல் ஜமாஅத் என தம்மை அழைத்துக் கொள்ளும் கப்ரு வணங்கிகளும் முன்வைத்த முக்கிய ஏழு ஆதாரங்களையும் எடுத்துக் காட்டி எமது விளக்கத்தை பதிவு செய்துள்ளோம். இந்த ஆதாரங்களுக்கு நாம் அளித்த விளக்கங்களில் எவருக்கேனும் மாற்றுக்கருத்து இருந்தால் தாராளமாக எமது ஜமாஅத்தை தொடர்பு கொள்ளலாம். பேசுவதற்குண்டான ஏற்பாடுகளை செய்யலாம். அதற்கு நாம் தயாராகவே உள்ளோம். சத்தியத்தை தெளிவாக எடுத்துக் கூறுவதும், அசத்தியத்தை மக்களுக்கு விளக்குவதுமே எமது குறிக்கோள் என்பதையும் இங்கு நினைவூட்டிக் கொண்டு இத்தொடரை நிறைவு செய்கிறோம். எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தை பின்பற்றி அசத்தியத்தை தவிர்ந்து கொள்ள நல்லருள் பாலிப்பானாக!

ntj.com